சிவோஹம்,
ஆசையை சீர் செய்ய தடையாய் இருப்பது சினம் என்பதை பார்த்தோம்.சினம் அல்லது கோபத்தை தவிர்ப்பது எவ்வாறென்பதை இப்போது பார்ப்போம். தன்னையும் கெடுத்துப் பிறரையும் கெடுத்துத் தற்காலத்திலும் துன்பம் உண்டாக்கிப் பின்னரும் துன்பத்தை நீடிக்கச் செய்யும் ஒரு உணர்ச்சிவயப்பட்ட பகை உணர்வே சினம்ஆகும்.சினம் எழுகின்ற போதுநமது உயிர் சக்தியானது அதிகமாக வெளியேறுகிறது. அதனால் உடலும் மனமும் பாதிக்கப்படும். நமக்கு கோபம் ஏற்படும்போது நாமே கோபமாக மாறுகிறோம், தன் நிலையில் மாறுதல் அடைகிறோம் எனபது தான் பொருள்.
நாம் நம் உண்மை நிலையில் இருந்து கீழ்நோக்கி வரும் போது நம்மை பரம்பொருளில் இருந்து வேறுபட்டதாக நினைக்கின்றோம். அப்போது நமக்கு சுய நலம் ஏற்படுகிறது.நம் சுயநலத்திற்கு நாம் செய்யும் விஷயங்களுக்கு தடை ஏற்படும் போது நமக்கு கோபம் வருகிறது.
ஒரு கதை சொல்கிறேன். எவ்வுயிரையும் தம் உயிர் போல் எண்ணி வாழ்ந்து வந்தார் ஒரு சிவனடியார்.“எல்லாம் ஆகி நின்றாய் போற்றி” என்ற திருநாவுக்கரசு சுவாமிகளின் திருவாக்கின்படி,பார்கின்ற யாவற்றையும் சிவமாகவே எண்ணி வாழ்ந்தார் அவர். வயது எழுபத்து ஐந்து ஆயிற்று. நல்ல கட்டான உடல். திருநீற்றினை உடம்பெல்லாம் அணிவார். காலை நண்பகல், மாலை, நடுநிசி ஆகிய காலங்களில் தவறாமல் திருஐந்தெழுத்தினைச் செபித்து வருவார். மனைவி மக்கள் யாரும் இல்லை.
ஊரின் கடைசியில் ஒரு ஓலைக்குடிசையில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் காலையில் இறைவழிபாடு முடித்து வயிற்றுப்பிழைப்பிற்கு என வேலைக்குச் சென்றார். மாலையில் தமது இருப்பிடம் வந்தார். உடல் சுத்தம் செய்தார். திருநீறு அணிந்தார், சிவத்தியானம் பூசை முதலியனவற்றை முடித்தார். இரவு உணவிற்குக்கோதுமைத்தோசை நான்கு செய்து ஒரு தட்டில் வைத்தார். சாப்பிடும் தட்டினைகழுவுவதற்குச் சென்றார். நாய் ஒன்று வந்து நான்கு தோசைகளையும் வாயினால் கவ்விச்சென்றது. அதனைக்கண்ட சிவனடியார், ஒரு கையில் தோசைக்குரிய குழம்பினை எடுத்துகொண்டார் மறுகையில் விளக்கு ஒன்றினை எடுத்துகொண்டார். “தோசைக்கு வேண்டிய குழம்பு கொண்டுவருகிறேன் சிவா” நில்லு என்று சொல்லிக்கொண்டே நாயின் பின்னால் ஓடினார். நாய் தன்னை அடிக்க வருகிறார் என்று எண்ணி ஓடிகொண்டே இருந்தது. இவரும் விடாமல் ஓடினார். கடைசியில் மூர்ச்சித்து கீழே விழுந்தார். நாய் காணவில்லை. சிவபெருமானார் உமாதேவியாருடன் காட்சி கொடுத்தார். எல்லா உயிரையும் சிவமாகவே எண்ணி வாழ்ந்ததனால் அவருக்கு சிவ தரிசனம் கிடைத்தது.
இந்த கதையில் சிவனடியார் தன் உண்மைநிலையில் இருந்ததனால் அவரால் அனைத்தையுமே சிவமாக பார்க்க முடிந்தது. அதற்கு மாறாக அவர் கீழ்நிலையில் இருந்திருந்தால் அவர் அந்த நாய் மீது கோபப்பட்டு அதை துன்புறுத்துவார். ஆக சுயநலம் கோபத்திற்கு வழிவகுக்கிறது. இதில் இருந்து விடுபடுவதற்கு ஒரு எளிய வழியை கூறுகின்றேன். கோபம் வரும் போது இரண்டு அல்லது மூன்று ஆழ்ந்த மூச்சு எடுத்து “சிவோஹம்” என்று சொல்லுங்கள். “சிவோஹம்” என்ற சொல்லின் பொருளான “நான் சிவன்” என்பதனை புரிந்து கொள்ள முயற்சிப்போம். அந்த முயற்சி நம்மை மீண்டும் மேல்நோக்கி அழைத்து செல்லும். அப்பொழுது நம் சுயநலம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.
.................நம் அகத்தை பசுமையாக்கும் பணியினை நாம் தொடர்வோம்.